அறிமுகம்

இரா.முத்தரசன் – ஓர் அறிமுகம்

தனது பதின்ம வயது முதல் எழுத்துலகில் தீவிர ஈடுபாடு காட்டி வந்திருக்கும் இரா.முத்தரசன் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், திரைப்பட விமர்சனங்கள், அரசியல் கண்ணோட்டம் என பன்முகத் தளங்களிலும் தொடர்ந்து தடம் பதித்து வருபவர்.

எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய அவர் பின்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்ததோடு, அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டியவர். அதன் காரணமாக இடைப்பட்ட காலத்தில் எழுத்துத் துறையில் அதிகம் எழுதாமல் ஒதுங்கிக் கொண்டாலும் அவ்வப்போது தொடர்ந்து தனது படைப்புகளை மலேசிய இலக்கிய உலகுக்கு வழங்கி வந்தவர்.

நீண்ட காலமாக அச்சுப் பத்திரிக்கைகளிலும், வார, மாத இதழ்களிலும், நாளிதழ்களிலும், வெளிவந்து கொண்டிருக்கும் இரா.முத்தரசனின் எழுத்துப் படைப்புகளையும் அவர் குறித்த தகவல்களையும் ஒருங்கிணைத்து, இணையத் தளத்தில் வழங்குவதோடு, அந்தப் படைப்புகளை எதிர்கால சந்ததியினருக்காகவும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் பயன்பாட்டுக்காகவும் மின்னிலக்கமாக உருமாற்றும் ஒரு முயற்சிதான் இந்த இணையத் தளம்.

கல்விப் பின்னணி

இராமசாமி வெங்கட்ராமன் – வீரம்மாள் இராமசாமி தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக முத்தரசு என்ற இயற்பெயரோடு பிறந்த முத்தரசன் எழுத்துத் துறையில் முத்தரசன் என்ற பெயரோடு வலம் வந்தார்.

கோலாலம்பூர், செந்துலில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பக் கல்வியை செந்துல் தமிழ்ப் பள்ளியில் படித்து முடித்த பின்னர் இடைநிலைக் கல்வியை எம்பிஎஸ் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் படிவத்தோடு நிறைவு செய்தார்.

தொடர்ந்து கல்வியைத் தொடர முடியாத சூழலில் பல இடங்களில் வேலை செய்தார். 1977 செப்டம்பர் முதல் 1978 செப்டம்பர் வரை முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் அமரர் முருகு சுப்பிரமணியன் நடத்திய “புதிய சமுதாயம்” மாதமிருமுறை இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

அதன் பின்னர் 1978 நவம்பர் முதல் 1980 ஏப்ரல் வரையில் மஇகா தலைமையகத்தில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து விலகி 1980 ஏப்ரல் முதற்கொண்டு 1982 ஏப்ரல் வரை டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில்  மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணிபுரிந்தார்.

1982 மே மாதம் தொடங்கி, 1988 ஜூன் வரையில் ஹாங்காங் அண்ட் ஷாங்காய் வங்கியில் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்த முத்தரசன் அங்கிருந்தபடியே இலண்டன் பல்கலைக் கழகத்தில் தூரக் கல்வியாக சட்டத் துறையில் படித்து பட்டம் பெற்றார்.

பின்னர் சிஎல்பி (Certificate in Legal Practice – CLP) என்ற வழக்கறிஞர்களுக்கான சட்டப் பயிற்சிப் படிப்பையும் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார்.

சிறிது காலம் ரீமா கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் சட்டப் பாடங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் 1992-ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.

2001-ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் சில வணிக முயற்சிகளில் ஈடுபடுவதற்காக வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகினார் – வணிகத்தில் ஈடுபட்டார்.

2006 முதல் 2008 வரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் சேர்ந்து படித்து வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தைப் (எம்பிஏ) பெற்றவர் முத்தரசன்.

எழுத்தாளராக …ஊடகவியலாளராக…நூலாசிரியராக…

தனது 12-வது வயதில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘திருமகள்’ என்ற மாத இதழுக்காக “மகாபாரதம்” குறித்த தனது முதல் கட்டுரையை எழுதி எழுத்துலகில் பிரவேசித்தார் முத்தரசன்.

பின்னர் பதின்ம வயதில் அவரது எழுத்தார்வம் தீவிரமடைந்து சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதத் தொடங்கினார்.

1977-ஆம் ஆண்டில் மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி துன் சாமிவேலு – டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் இடையில் நடைபெற்றபோது தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய “யார் மஇகா துணைத் தலைவராகத் தேர்வு பெற வேண்டும்?” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் முத்தரசன் சுப்ராவுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது.

1977-1978 ஆம் ஆண்டில் புதிய சமுதாயம் மாதமிரு முறை இதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட முத்தரசன் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

தனது சிறுகதைகளைத் தொகுத்து, “இதுதான் முதல் ராத்திரி” என்ற தலைப்பில் நூலாக 1988-இல் வெளியிட்டார்.

2008 ஆண்டு தொடங்கி மலேசியன் இந்தியன் டுடே (Malaysian Indian Today) என்ற தமிழ்-ஆங்கில செய்தி இணையத் தளத்தை, பினாங்கு டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் என்ற நண்பரின் ஆதரவோடு தொடங்கி நடத்தியவர் முத்தரசன். அநேகமாக மலேசியாவில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் மொழி செய்தி இணையத் தளம் மலேசியன் இந்தியன் டுடே ஆகும்.

அதன் பின்னர் 2009-ஆம் ஆண்டில் “மலேசியன் இந்தியன் பிசினஸ்” (Malaysian Indian Business) என்ற ஆங்கில மொழி மாத வணிக இதழையும் டத்தோ ஹென்ரியுடன் இணைந்து தோற்றுவித்தார். அநேகமாக ஆங்கிலத்தில் இந்திய வணிகத் துறை குறித்து வெளிவந்த முதல் ஆங்கில மாத இதழ் இதுவாகத்தான் இருக்கும். பின்னர் வேறொரு நிறுவனத்தினர் இந்த ஆங்கில இதழை ஏற்று நடத்தி வந்தனர்.

தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் எதிர்க்கட்சிகள் பெற்ற மாபெரும் வெற்றியின் பின்னணிக்கான காரணங்களை விளக்கி, Winning Strategies of Anwar Ibrahim என்ற தலைப்பிலான ஆங்கில நூல் ஒன்றை எழுதினார்.

இதே நூலின் தகவல்களின் அடிப்படையில் “அன்வார் இப்ராகிமின் வெற்றிப் போராட்டங்கள்” என்ற பெயரில் தமிழிலும் நூலாக்கினார்.

இதே நூல் “Strategi Kemenangan Anwar Ibrahim” என்ற பெயரில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மொழியிலும் இந்த நூலின் சுருக்கம் நூலாக வெளிவந்தது.

2017-ஆம் ஆண்டில் “மண்மாற்றம்” என்ற நாவலையும் “செல்லியல் பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பையும் ஒரே நேரத்தில் நூல்களாக வெளியிட்டார்.

மஇகாவில் ஈடுபாடு…

1978-ஆம் ஆண்டில் மஇகா தலைமையகத்தில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றியபோது ஏற்பட்ட அரசியல் தொடர்புகளின் காரணமாக பின்னர் மஇகா அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டியவர் முத்தரசன்.

மஇகா செந்துல் பாசார் கிளையின் உறுப்பினராகவும் பின்னர் செயலாளராகவும் சேவையாற்றிய முத்தரசன், 1980-1982-ஆம் ஆண்டுகளில் மஇகா கூட்டரசுப் பிரதேச அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றினார்.

1987-ஆம் ஆண்டில் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார்.

மஇகா கலாச்சாரக் குழு டி.பி.விஜேந்திரன் தலைமையில் நடத்திய பாரதியார் நூற்றாண்டு விழாவின் ஏற்பாட்டுச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சமூக இயக்கங்களில் ஈடுபாடு…

இளவயது முதல் கோலாலம்பூர், செந்தூலில் இயங்கும் முத்தமிழ்ப் படிப்பகத்தில் உறுப்பினராக இணைந்து தீவிர வாசிப்பில் ஈடுபட்ட முத்தரசன் முத்தமிழ்ப் படிப்பகத்தின் இலக்கியப் பகுதி செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். முத்தமிழ்ப் படிப்பகத்தில் வெள்ளிவிழா ஆண்டுக் கொண்டாட்டக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது அந்த படிப்பகத்தின் ஆயுட்கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இளவயதில் மணிமன்றத்திலும் ஈடுபாடு காட்டிய முத்தரசன் கோலாலம்பூர் மணிமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அமரர் எம்.துரைராஜ் தலைமையில் பணியாற்றியிருக்கிறார்.

செல்லியல் இணைய ஊடகத் தளத்தின் நிருவாக ஆசிரியராக…

12 டிசம்பர் 2012-இல் தொடங்கப்பட்ட “செல்லியல்” என்ற இணைய ஊடகத்தை மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறனோடு இணைந்து தோற்றுவித்தார் முத்தரசன்.

தற்போது அந்த இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு தனது எழுத்துப் பணிகளையும் தொடர்ந்து வருகிறார் முத்தரசன்.

குடும்பம்

இவரது துணைவியார் விக்னேஸ்வரி சாம்பசிவம். தீபன் என்ற புதல்வனையும், நந்தனா, சுகந்தா என இரு புதல்விகளையும் கொண்டது இவர்களின் குடும்பம்.